ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேல் புரிந்த குற்றங்களை விசாரிக்க குழுவை அமைக்க வேண்டும்- கட்டார் வலியுறுத்து

டோஹா, (கட்டார்) நவ 21- காஸா பகுதியிலுள்ள சிவிலியன்களுக்கு
எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் புரிந்த குற்றங்களை
விசாரிக்க அனைத்துலக நிலையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என
கட்டார் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வட காஸாவிலுள்ள இந்தோனேசிய மருத்துவமனை மீது இஸ்ரேல்
மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் பல பாலதீனர்கள்
கொல்லப்பட்டதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த
கோரிக்கைய கட்டார் முன்வைத்துள்ளது.

இந்தோனேசிய மருத்துவமனையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட
தாக்குதலானது, காஸா முழுவதும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள்
மற்றும் மக்கள்தொகை மிகுந்த பகுதிகளை குறிவைக்கும் ஆக்கிரமிப்பின்
விரிவாக்க அணுகுமுறையாக கருதப்படுகிறது. இது அனைத்துலகச்
சட்டங்கள் மற்றும் ஜெனிவா மாநாட்டின் விதிகளை அப்பட்டமாக மீறும்
செயலாகும் என வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இஸ்ரேலின் படுகொலைகளைத் விரைந்து நிறுத்துவதற்கும் இந்தோனேசிய
மருத்துவமனையில் அகதிகளாக அடைக்கலம் நாடியுள்ள இரண்டு லட்சம்
மக்களைக் காப்பாற்றுவதற்கும் ஏதுவாக அனைத்துலக சமூகம் விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

இந்தோனேசிய மருத்துவமனை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்
தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர்
காயமடைந்ததாக காஸாவைத் தளமாகக் கொண்ட சுகாதார அமைச்சு
கூறியது.

மருத்துவமனைகளை பெரும் புதை குழிகளாக மாற்ற இஸ்ரேலிய
இராணுவம் முயன்று வருவதாக அமைச்சு குற்றஞ்சாட்டியது.

காஸா நகரிலும் காஸாவின் வட பகுதியிலும் செயலபட்டு வரும் ஒரே
மருத்துவமனையாக இந்த இந்தோனேசிய மருத்துவமனை விளங்கி
வருகிறது. மற்ற மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலையில்
உள்ளன. குறிப்பாக அல்-ஷிபா மருத்துவமனை தற்போது இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.


Pengarang :