SELANGOR

இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க விவசாயத் திட்டங்களுக்கு புத்துயிர்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், நவ 23 – மேலும் அதிகமான இளைஞர்கள் விவசாயத்
துறையில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக மாநில அரசு விவசாயத்
திட்டங்களுக்குப் புத்துயிரளிக்கவுள்ளது.

இந்நோக்கத்தின் அடிப்படையில் வேளாண் களப் பள்ளி (எஃப்.எஃப்.எஸ்.)
மற்றும் மலேசிய சிறந்த வேளாண் நெறிமுறை சான்றிதழ் திட்டம்
(மைஜிஏபி) ஆகிய திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக
விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.

தற்போதுள்ள விவசாயிகளில் சுமார் 6,000 பேர் வயதானவர்களாக
உள்ளனர். யார் அவர்களின் இடத்தை நிரப்பப் போகிறார்கள் என்பதுதான்
எங்களின் தற்போதைய கவலையாகும். அழுக்கும் மற்றும் வெப்பம்
நிறைந்த தொழில் என்பதால் பெரும்பாலான இளைஞர்கள் விவசாயத்
துறையில் ஆர்வம் காட்டுவதில்லை என்று அவர் சொன்னார்.

எஃப்.எஃப்.எஸ் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதன் மூலம்
அரிசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் விவசாயத்
துறையில் நவீன சாதனங்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என
அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சபாக் தொகுதி உறுப்பினர் சலேஹான்
முக்ஹி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார். விவசாயத் துறையில் இளைஞர்கள் ஈடுபடுவதை
ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து
அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு தனியார் துறை உள்பட அனைத்துத்
தரப்பினருடன் மாநில அரசு ஒத்துழைத்து வருவதாக பாண்டான் இண்டா
உறுப்பினருமான இஷாம் கூறினார்.


Pengarang :