ANTARABANGSASELANGOR

பாலஸ்தீனத்திற்கு பொதுமக்கள் வழங்கிய 43 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் சுல்தான் ஒப்படைத்தார் 

ஷா ஆலம், நவ 24- பாலஸ்தீன மனிதாபிமான உதவித் திட்டத்திற்கு பொது மக்கள் நன்கொடையாக வழங்கிய 43 லட்சத்து 74 ஆயிரம் வெள்ளியை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (ஜாக்கிம்) பாலஸ்தீன நிதியிடம் ஒப்படைத்தார்.

மாநிலத்திலுள்ள சூராவ் மற்றும் பள்ளிவாசல்களில் வசூலிக்கப்பட்ட இந்த நிதியை இங்குள்ள புக்கிட் காயாங்கானில் இன்று நடைபெற்ற நிகழ்வில்  ஜாக்கிம் தலைமை இயக்குநர் ஹக்கிமா முகமது யூசுப்பிடம் மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா  வழங்கினார்.

இந்த நன்கொடையை வழங்கியவர்களுக்கு எல்லா வல்ல இறைவனின் அருள் கிட்ட தாம் பிரார்த்திப்பதாகக் கூறிய அவர், இந்நிதி பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

இந்த நிதி ஒப்படைப்பு நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா, சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமது யூசுப், ஜாயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவின் இயக்குநர் டத்தோ சஹாஸிஹான் அகமது மற்றும் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி ஙா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீன மக்களுக்கான நிதி வசூலை ஒருங்கிணைப்பதற்காக ஜாய்ஸ் கடந்த அக்டோபர் மாதம் இந்த மனிதாபிமான நிதித் திட்டத்தை தொடக்கியது. 


Pengarang :