ANTARABANGSA

இஸ்ரேல் வான் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

காஸா, டிச 3- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் நேற்று காஸா தீபகற்பம் மீது  மேற்கொண்ட தரை, கடல் மற்றும் வான் தாக்குதல்களில் சிறார்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) கூறியது.

தென் காஸாவின் டி கான் யூனிஸ் பகுதியிலுள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் பெரும் எண்ணிக்கையிலான உயிரிழந்ததோடு பலர் காயமுற்றதாக அது தெரிவித்தது.

வீடுகளை விட்டு வெளியேறும்படி டி கான் யூனிஸ் பகுதி மக்களை இஸ்ரேல் நிர்பந்தித்த காரணத்தால் குடியிருப்புகளை இழந்து பரிதவிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சூஜெயா எனும் பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலில 150 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குல்களில்  காயமடைந்தவர்களும் கொல்லப்பட்டவர்களின் உடல்களும் அல்-அஹ்லி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன. மேலும் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. 

காஸா தீபகற்பத்தின் வட பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமிலுள்ள பெட்ரோல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அறுவர் உயிரிழந்ததோடு மேலும் இருபது பேர் காயமுற்றனர்.

அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஏற்பாட்டில் அமல்படுத்தப்பட்ட ஏழு நாள் சண்டை நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த சில நிமிடங்களில் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான தாக்குதலைத் தொடக்கியது.


Pengarang :