MEDIA STATEMENT

217வது போலீஸ் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ மூடா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

ஷா ஆலம், மே 19- நாட்டின் 217வது போலீஸ் தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில காவல் துறையின் ஏற்பாட்டில் இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் நிகழ்வில் சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி உள்பட சுமார் 350 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பித்தனர்.

விஷேச பூஜையுடன் நடைபெற்ற இந்த இந்த வழிபாட்டு நிகழ்வில் காவல் துறையின் முன்னாள் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ சசிகலா தேவி, பல்வேறு பணி சுமைக்கு மத்தியில் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து காவல் துறை உறுப்பினர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

நாட்டில் 217வது போலீஸ் தினம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட வேளையில் சிலாங்கூர் மாநிலத்தின் பரபரப்பான சூழல் மற்றும் கோல குபு பாரு இடைத் தேர்தல் காரணமாக சற்று தாமதமாக இந்த நிகழ்வை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார் அவர்.

காவல் துறையின் தோற்றத்தை மேம்படுத்துவதிலும் பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் துணை புரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை செவ்வனே செய்வதில் இறைவன் அருளைப் பெற பிரார்த்திக்கும் அதேவேளையில் காவல் துறை அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே அணுக்கான நட்புறவு ஏற்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தித் தந்துள்ளது என்றார் அவர்.

சிறப்பு பூஜைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, சிலாங்கூரில் உள்ள 16 போலீஸ் மாவட்டங்கள் மற்றும் மாநில தலைமையகத்தில் பணி புரியும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த சுமார் 350 இந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த சிறப்பு வழிபாட்டில்  கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் துறையினர் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதற்கும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து அளவளாவுவதற்கும் இந்த நிகழ்வு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது என அவர் சொன்னார்.

காவல் துறை அதிகாரிகளும் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப் படுகிறார்கள். அதே சமயம் ஆலயங்களும் குற்றத் தடுப்பு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :