SELANGOR

வலுவான அடித்தளத்தில் சிலாங்கூர்- பிராந்திய நிலையில் போட்டியிடவும் தயார்

ஷா ஆலம், டிச 5 – மலேசியாவின் பொருளாதாரத்திற்குத் தொடர்ச்சியாக
அதிக பங்களிப்பை வழங்கி வரும் சிலாங்கூர், பிராந்திய நிலையில் இதர
ஆசியான் மாநிலங்களுடன் போட்டியிடுதவதற்குரிய தயார் நிலையிலும்
உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழிலியல் சூழியல் ரீதியாகச் சிலாங்கூர் வலுவான
அடித்தளத்தைக் கொண்டுள்ளது என வர்த்தக, முதலீடு மற்றும் கொள்கை
வியூகங்களை வகுப்பதற்குப் பொறுப்பான நபர் என்ற முறையில் தாம்
நம்புவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

பெரு நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்ற
இவ்வாண்டிற்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு
(சிப்ஸ்) மற்றும் சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி ஆகியவற்றின்
மூலம் 700 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் பதிவு
செய்யப்பட்டது இதற்கு ஒரு சான்றாக விளங்குகிறது என்று அவர்
சொன்னார்.

இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக முதலீட்டு வாய்ப்புகளைப்
பெறுவதோடு மட்டுமின்றி மக்களுக்கு பயன் தரக்கூடிய தொழில்நுட்ப
மாற்றங்களுக்கான வாய்ப்பினையும் அடைவது இதில் முக்கியமானதாகும்
என்றார் அவர்.

மக்கள் ஆசியான் நிலையில் போட்டியிடக்கூடிய தளமாகச் சிலாங்கூரை
உருவாக்க மாநில அரசு தயாராகி வருகிறது. மக்களும் தொழிலாளர்களும்
போட்டியிடும் ஆற்றலை ஆக்ககரமான முறையில் பெருக்கிக் கொள்ளும்
அதேவேளையில் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளையும் முறையாகப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைவதையொட்டி
சிலாங்கூர் கினிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து ஆகஸ்டு 12ஆம் தேதி இஸ்தானா ஆலம் ஷாவில்
நடைபெற்ற நிகழ்வில் இங் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவியேற்றார்.


Pengarang :