NATIONAL

தொலைபேசி மோசடிக் கும்பல் கைவரிசை- ஓய்வு பெற்ற இராணுவ வீரர் வெ.125,000 இழந்தார்

அலோர் காஜா, டிச 5- போஸ் மலேசியா மற்றும காவல் துறையினர்
எனக் கூறிக் கொண்ட தொலைபேசி மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி
ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் தனது முதுமைகால சேமிப்பான
125,000 வெள்ளியை இழந்தார்.

நாற்பது வயதான அந்த முன்னாள் இராணுவ வீரர் பெறப்படாத
பொட்டலம் தொடர்பில் கோலாலம்பூரிலுள்ள போஸ் லாஜூ
தலைமையகத்தின் ஊழியர்கள் எனக் கூறிக் கொள்ளும்
தரப்பினரிடமிருந்து இம்மாதம் 2ஆம் தேதி காலை 10.30 மணியளவில்
அழைப்பை பெற்றதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அர்ஷாட் அபு கூறினார்.

அந்த பொட்டலத்தில் அடையாளக் கார்டுகள் மற்றும் கிரடிட் கார்டுகள்
போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பதாகவும் அதனை
சுங்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தொலைபேசியில்
அழைத்த நபர் கூறியுள்ளார்.

பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு பினாங்கு போலீஸ்
தலைமையகத்தைச் சேர்ந்த சார்ஜன் சுராயா என்பருக்கு மாற்றி
விடப்பட்டதாகவும் இந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் டானி என்பவர்
விசாரித்து வருவதாக சார்ஜன் சுராயா புகார் தாரரிடம் தெரிவித்ததாகவும்
அவர் சொன்னார்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில்
ஈடுபட்டதாக புகார்தாரர் மீது அந்த போலீஸ் அதிகாரி
குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த புகார் மீதான விசாரணைக்காக பணத்தை
செலுத்தும்படி அந்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரும் கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இரு வங்கிக்
கணக்குகளில் மொத்தம் 125,000 வெள்ளியை செலுத்தியுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட நபர் பினாங்கு போலீஸ் தலைமையகத்தைத்
தொடர்பு கொண்டு சார்ஜன் சுராயா மற்றும் இன்ஸ்பெக்டர் டானியுடன்
பேச முயன்ற போது தாம் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாக அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :