MEDIA STATEMENTNATIONAL

27 முறை கத்தியால் குத்தப்பட்டு முதியவர் படுகொலை- பினாங்கில் சம்பவம்

ஜோர்ஜ் டவுன், டிச 6- முதியவர் ஒருவர் 27 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இக்கோரச் சம்பவம் இங்குள்ள ஜாலான் பேராக், அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று மாலை நிகழ்ந்தது.

ஆடவர் ஒருவர் கத்திக் குத்து காயங்களுக்குள்ளானது தொடர்பில் அந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்களிடமிருந்து நேற்று மாலை 6.18 மணிக்கு தாங்கள் தகவலைப் பெற்றதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் வி.சரவணன் கூறினார்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த தாகக் கூறிய, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

அந்த ஆடவரின் உடலில் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 27 காயங்கள் உடல் முழுவதும் காணப்பட்டதை மருத்துவச் சோதனையின் முடிவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.

அந்த குடியிருப்பு பகுதியின் கார் நிறுத்துமிடத்திற்கு  மோட்டார் சைக்கிளில் இரு ஆடவர்கள் நுழைந்த வேளையில் அவர்களில் ஒருவன் அந்த முதியவரை சரமாரியாக குத்தியப் பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.

தாக்குதலை நடத்தும் போது போலீசார் வரும் பட்சத்தில் விரைந்து தப்பியோடுவதற்கு ஏதுவாக கொலையாளியின் சகா மோட்டார் சைக்கிளில் தயாராக காத்திருந்தான் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சம்பவம் இடம் மற்றும் பாதுகாவலர் சாவடியில் இருந்த இரகசிய கண்காணிப்பு கேமராக்களை தாங்கள் விசாரணைக்காக கொண்டுச் சென்றுள்ளதாவும் கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்த கொலைக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. எனினும், ஜாலான் பேராக் சந்தையில் உணவு விற்பனை செய்து வரும் அந்த முதியவரிடம் கொள்ளையிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :