MEDIA STATEMENTNATIONAL

செந்தோசா தொகுதியில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை- 400 பேர் பங்கேற்றனர்

கிள்ளான், டிச 6- செந்தோசா தொகுதியில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் வாங்கிச் சென்றனர்.

இங்குள்ள ஜாலான் டத்தோ டாகாங் 39பி, புதன் கிழமை இரவுச் சந்தை பகுதியில் காலை 10.00 மணி தெடங்கி நண்பகல் 12.00 மணி வரை இந்த விற்பனை நடைபெற்றது. இந்த விற்பனையில் கலந்து பொருள்களை வாங்கும் வாய்ப்பினை தவற விடக்கூடாது என்பதற்காக பொது மக்கள் காலையிலே வந்து வரிசையில் காத்திருந்தனர்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் பொது மக்களுக்கு குறிப்பாக செந்தோசா தொகுதியினருக்கு  உதவும் நோக்கில் இந்த மலிவு விற்பனைக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம். 


Pengarang :