NATIONAL

முறையான கவனிப்பின்மையால் சிறுமி மரணம்- தாய், தந்தை கைது

கோலாலம்பூர், டிச 8 – துன்புறுத்தல் மற்றும் முறையான
கவனிப்பின்மையால் ஆறு வயது சிறுமி கடந்த சனிக்கிழமை துங்கு
அஜிசா மருத்துவமனையில் உயிரிழந்தது தொடர்பில் அந்த சிறுமியின்
பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிள்ளையை முறையாகப் பராமரிக்கத் தவறியதற்காக 2001ஆம் ஆண்டு
சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக
30 வயது மதிக்கத்தக்க அத்தம்பரியர் இம்மாதம் 13ஆம் தேதி வரை தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
அலாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

அந்த சிறுமியின் தந்தை உணவு விநியோக பணியில் ஈடுபட்டுள்ள
வேளையில் தாயார் இல்லத்தரசியாக உள்ளதாக கூறிய அவர்,
அத்தம்பதியருக்குச் சொந்தமான மூன்று மற்றும் ஏழு வயதுடைய இரு
பிள்ளைகள் சமூக நலத் துறையின் பாதுகாப்பில் தற்காலிகமாக
வைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.

இன்று இங்குள்ள செத்தியவங்சா போலீஸ் நிலையத்தின் திறப்பு
விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்த போலீஸ் நிலையத்தை புக்கிட் அமான் குற்றவியல்
தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அய்டி
இஸ்மாயில் திறந்து வைத்தார்.

பண்டார் துன் ரசாக்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோர்களுடன்
வசித்து வந்த ஆறு வயதுச் சிறுமி துன்புறுத்தப்பட்டதோடு முறையாகக்
கவனிக்கப்படாத காரணத்தால் துங்கு அஜிசா மருத்துவமனையில் கடந்த
சனிக்கிழமை உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :