உலகத் தரத்திலான மாநகர அந்தஸ்தைப் பெற போக்குவரத்து மேலாண்மை திட்டம்- எம்.பி.எஸ்.ஏ. அமல்படுத்துகிறது

ஷா ஆலம், டிச 9- முறையான மற்றும் ஆக்ககரமான போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை வரைவதில் பொது மக்களின் கருத்தைப் பெறும் நோக்கில் ஷா ஆலம் மாநகர் மன்றம் நேற்று பொது கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது.

மொத்தம் 30,310.72  ஹெக்டர் பரப்பளவிலான பகுதியை உள்ளடக்கிய ஷா ஆலம் போக்குவரத்து மேலாண்மை பெருந்திட்டத்தை (சிட்மாஸ்) உருவாக்கும் நாட்டின் முதலாவது ஊராட்சி மன்றமாக ஷா ஆலம் மாநகர் மன்றம் விளங்குவதாக  மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் முகமது அஸ்ஹார் ஷாரிப் கூறினார்.

இந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டப் பரிந்துரை மூன்று ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத் திட்டம் (2015), மத்திய காலத் திட்டம் (2030) மற்றும் நீண்ட காலத் திட்டம் (2025) ஆகியவையே அந்த மூன்று பிரிவுகளாகும் என்று அவர் சொன்னார்.

நடப்பு போக்குவரத்து  மேலாண்மை முறையை ஆராய்வது, மேம்பாட்டுத் திட்டங்களை அங்கீகரிப்பது, சாலை போக்குவரத்து தொடர்பான பிரச்சனைளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை வழங்குவது, மற்றும் பொது போக்குவரத்து முறை ஆகியவை சிட்மாஸ் திட்ட ஆய்வுகளின் முதன்மை இலக்காக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

குடியிருப்பு பகுதிகளை இணைப்பதற்கு ஏதுவாக விரிவான மற்றும் ஆக்ககரமான போக்குவரத்து முறையை  வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

விண்ட்ஹாம் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் செரேமி தர்மான், கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸூவான் அகமது காசிம், மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியாம் அப்துல் ரஷிட், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :