NATIONAL

சூலு உரிமை கோரல் வழக்கில் ஸ்டெம்பாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்- மலேசியா எதிர்பார்ப்பு

கோலாலம்பூர், டிச 12- நீதிமன்ற உத்தரவை மீறியது மற்றும் சூலு
உரிமை கோரல் வழக்கில் மத்தியஸ்ராக நியமிக்கப்பட்டது
செல்லுபடியாகாது என என அளிக்கப்பட்டத் தீர்ப்பை தொடர்ந்து
புறக்கணித்து வந்தது ஆகிய காரணங்களுக்காகக் கோன்ஸாலோ
ஸ்டெம்பாவுக்கு மாட்ரிட் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்
என மலேசியா எதிர்பார்க்கிறது.

சூலு தரப்பினரின் உரிமை கோரலுக்கு எதிரான மலேசிய அரசாங்கத்தின்
வழக்கிற்கு வலு சேர்க்கும் என்பதால் மாட்ரிட் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக
முக்கியமானது என தாங்கள் கருதுவதாக பிரதமர் துறை அமைச்சர்
(சட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்) டத்தோ அஸாலினா
ஓத்மான் கூறினார்.

எதிர்காலத்தில் எந்த நாடும் எதிர்நோக்கும் இது போன்ற உரிமைக் கோரல்
பிரச்சனைகளுக்கு மாட்ரிட் நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கும்
என்றும் அவர் சொன்னார்.

மேலும், மலேசியாவை களங்கப்படுத்தியதற்காக ஸ்டெம்பாவுக்கு வெறும்
அபராதம் மட்டும் விதிக்காமல் சிறைத்தண்டனையையும் நீதிமன்றம்
வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

சூலு சுல்தானின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்ளும் எண்மருக்கு 1,490
கோடி அமெரிக்க டாலர் (6,259 கோடி வெள்ளி) இழப்பீடு வழங்க ஸ்டெம்பா
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு உத்தரவை அமல்படுத்துவதற்காக லக்ஸ்ம்பெர்க் மற்றும்
நெதர்லாந்தில் உள்ள பெட்ரோனாஸ் நிறுவனங்களின் சொத்துகளைப்
பறிமுதல் செய்ய முற்பட்டதோடு பிரான்சில் உள்ள மலேசியா
அரசாங்கத்திற்குச் சொந்தமான அரச தந்திர சொத்துகள் மீது குறி
வைத்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை மாட்ரிட் நீதிமன்றம் இன்னும் நிர்ணயிக்கப்படாதப்
பிறிதொரு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக அஸாலினா சொன்னார்.


Pengarang :