NATIONAL

லஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் போலீஸ் அதிகாரிக்கு சிறை, அபராதம்

குவாந்தான், டிச 15 – ஐந்தாண்டுகளுக்கு முன்னர் போதைப் பொருள்
தொடர்பான வழக்கில் 5,000 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதற்காக உதவி
சூப்ரிண்டெண்டன் (ஏ.எஸ்.பி.) ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றம் 12 மாதச் சிறை மற்றும் 25,000 வெள்ளி அபராதம் விதித்தது,
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதச்
சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லஞ்சக் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து
ஹஸ்புல்லா அலி அலியாஸ் (வயது 48) என்ற அந்த போலீஸ்
அதிகாரிக்கு நீதிபதி டத்தோ அகமது ஜம்ஸானி ஜைன் இத்தீர்ப்பை
வழங்கினார்.

அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பின் சாட்சியங்கள் அனைத்தையும்
செவிமடுத்தப் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர் நியாயமான சந்தேகங்களை
எழுப்பத் தவறியதோடு சாத்தியக்கூறுகளுக்கான சமநிலை
அனுமானத்தையும் தகர்க்கத் தவறி விட்டார் என்று நீதிபதி கூறினார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக ஹஸ்புல்லாவுக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிற்பகல் 12.30
மணியளவில் ஜாலான் பெசேராவில் உள்ள உணவகம் ஒன்றில் ஆடவர்
ஒருவரிடமிருந்து பணத்தைப் பெற்றதாக பகாங் மாநில போலீஸ்
தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு விசாரணைப் பிரிவில்
பணியாற்றி வரும் ஹஸ்புல்லா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

போதைப் பொருள் வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு
வழங்குவதற்காக அந்த பணம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹஸ்புல்லா மீது 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையத்தின் 17(ஏ)
பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூக்கப்படுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, லஞ்சத்
தொகையில் ஐந்து மடங்கு அல்லது 10,000 வெள்ளி இவற்றில் அதிகத்
தொகை அபராதமாக விதிக்கப்படும்.


Pengarang :