SELANGOR

தமிழ் மணி மன்றத்தின் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழா- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சிறப்பு வருகை

ஷா ஆலம், டிச 20 – மலேசிய தமிழ் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழர்
பாரம்பரிய விளையாட்டு விழா 2023 அண்மையில் இங்குள்ள எமரால்டு
தமிழப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்குக் கோத்தா
கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் சிறப்பு வருகை புரிந்து
வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

தமிழர்களின் தொன்மை வாய்ந்த தாயம், பல்லாங்குழி, கபடி, சிலம்பம், பரதம் போன்ற கலைகள் அழிந்து விடாமல் காத்து அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் நோக்கில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
பிரகாஷ் இத்தகைய பாரம்பரிய கலைகளை கட்டிக்காப்பதில் மிகவும்
முனைப்புடன் செயல்பட்டு வரும் மலேசிய தமிழ் மணி மன்றத்தை தாம்
பெரிதும் பாராட்டுவதாகக் கூறினார்.

தமிழர் பாரம்பரியக் கலைகள் மட்டுமின்றி மலாய் மற்றும் சீனர்களின்
பாரம்பரியக் கலைகளுக்கும் தொடர்ந்து புத்துயிரளிப்பதன் மூலம்
இக்கலைகளை மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச்
செல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவை தாங்கள்
கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாக மணி மன்றத்தின் தேசியத்
தலைவர் சு.வை. லிங்கம் கூறினார்.

இந்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கிய இருபது
போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர்
குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது நமது பாரம்பரியக்
கலைகள் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருவதை புலப்படுத்துவதாக
உள்ளது என அவர் தெரிவித்தார்.


Pengarang :