NATIONAL

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கோலா திரங்கானு, டிச.29: கம்போங் தோக் ஹக்கீம் என்ற இடத்தில் தோக் ஹக்கீம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன சிறுவன், சடலமாக நேற்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மீட்புக் குழுவினரால் 1.5 மீட்டர் ஆழத்தில் முஹம்மது ஹராஸ் இல்மான் முகமட் சியாஹ்ரில் ரெதுவானின் (11) சடலம் கண்டுபிடிக்கப் பட்டதாக கோலா திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரோசிசா அப்னி ஹஜர் தெரிவித்தார்.

“ஆற்று ஓரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வானிலை மற்றும் ஆற்று ஓரங்களில் காட்டு மரங்கள் சூழ்ந்திருந்த காரணங்களால் உடலைக் கண்டு பிடிப்பதில் சிரமங்களை எதிர் கொண்டோம்” என்று அவர் கூறினார்.

“அச்சிறுவன் தனது ஒன்பது வயது இளைய சகோதரர் முகமட் ஃபிராஸ் வாஃபி மற்றும் நண்பருடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சமயம் வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப் பட்டுள்ளான்.

ஜேபிபிஎம் கே9 பிரிவு உட்பட பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த மொத்தம் 72 உறுப்பினர்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :