NATIONAL

சட்டவிரோத அந்நியக் குடியேறிகளின் பத்துக்கும் மேற்பட்ட குடியேற்றப் பகுதிகள்- போலீசார் அடையாளம் கண்டனர்

கோலாலம்பூர், டிச 29 – இந்நாட்டில் சட்டவிரோதக் குடியேறிகளின் பிரதான
குடியேற்றப் பகுதிகளாக விளங்கும் பத்து இடங்களைப் போலீசார்
அடையாளம் கண்டுள்ளதாகத் தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர், கெடா, கிளந்தான் ஆகிய பகுதிகளில்
இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்நிய நாட்டினர் வர்த்தக வளாகங்களை தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் இடங்கள் மீது போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்நிய நாட்டினரின் படையெடுப்பை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த
நடவடிக்கைகள் தொடர்ந்தாற்போல் மேற்கொள்ளப்படும் என்று அவர்
சொன்னார்.

பிடிபடும் அந்நிய நாட்டினரை தடுத்து வைப்பதற்கான இடப் பற்றாக்குறை
போன்றப் பிரச்சனைகளையும் பொது மக்கள் உணர வேண்டும். எனினும்,
சட்டவிரோதகக் குடியேறிகளைத் தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகளை
நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற புக்கிட்
அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநரின்
பதவி ஏற்பு மற்றும் பதவி ஒப்படைப்புச் சடங்கில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் ,இதனைத் தெரிவித்தார்.

தலைநகர், ஜாலான் சீலாங்கில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி
மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பல்வேறு
குடிநுழைவுக் குற்றங்களுக்காக 1,101 அந்நிய நாட்டினர் கைது
செய்யப்பட்டனர்.

ஜாலான் சீலாங் மற்றும் காம்ப்ளெக்ஸ் கோத்தா ராயா பகுதியில்
குற்றச்செயல்களைத் தடுக்கவும் அந்நிய குடியேறிகளின் பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :