NATIONAL

ஜாலான் சீலாங் சோதனையின் போது வெ.85,000 திருடியதாக மூன்று போலீஸ்காரர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாம்பூர், டிச 29 – சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடந்த வாரம்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது வர்த்தக வளாகம்
ஒன்றிலிருந்து 85,000 வெள்ளியைத் திருடியதாகப் பொது நடவடிக்கைப்
படைப் பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் மீது இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கார்ப்ரல் முகமது ஹபிஷ் இர்ஷாட் முகமது நாவி (வயது 30) லான்ஸ்
கார்ப்ரல் முகமது அடிப் முகமது ஜப்ரி (வயது 35) மற்றும் லான்ஸ்
கார்ப்ரல் முகமது அமிருள் அய்மான் மாமாட் (வயது 26) ஆகிய மூவரும்
மாஜிஸ்திரேட் அய்ன அஸ்ஹாரா அரிபின் முன்னிலையில் தங்களுக்கு
எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 2.27 மணிக்கு லெபோ புடு ஆஃப்
ஜாலான் சீலாங்கில் உள்ள என்.ஜி.டபள்யு.இ. காபர் சென். பெர்ஹாட்
நிறுவனத்தின் முதல் மாடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அம்மூவர்
மீதும் கூட்டாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான
சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 380வது
பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசுத் தரப்பு சார்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் இஸாட் அமிர்
இட்ஹாம் இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அடி ஜூல்கர்னாய்ன் ஜூல்காப்ளி மற்றும் கைருனிசா அஸ்ஹாரா ஆகியோர் ஆஜராகின்றனர்.

அந்த வர்த்தக மையத்தில் இருந்த 85,000 வெள்ளி காணாமல் போனது
தொடர்பில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி போலீசார் புகாரைப் பெற்றனர்.
அந்த கட்டிடத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவது அங்கிருந்த இரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


Pengarang :