ANTARABANGSA

அனைத்துலக நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இனப் படுகொலைக் குற்றச்சாட்டு

காஸா/தி ஹேக், ஜன 12 –  காஸாவில் நிகழ்ந்த போரில்  இனப்படுகொலை  செய்ததாக இஸ்ரேல்  அனைத்துலக  நீதிமன்றத்தில்   கடந்த வியாழன்று  குற்றச்சாட்டுகளை  எதிர்கொண்டுள்ளது.

காஸாவின் வட பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை மீட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் அப்பகுதிக்குத் திரும்பத்  தொடங்கியுள்ளனர். அப்பகுதி  அழிவின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது.

இஸ்ரேலின் மூன்று மாத கால தொடர்ச்சியான குண்டு வீச்சுத் தாக்குதல் குறுகிய கடலோரப் அந்த பகுதிகளை நிர்மூலமாக்கியுள்ளதோடு 23,000 க்கும் அதிகமான மக்களையும் பலிகொண்டுள்ளது.

மேலும்,  கிட்டத்தட்ட 23 லட்சம்  பாலஸ்தீனர்கள்   வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப் பட்டுள்ளனர். இந்த முற்றுகை உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகங்களை முழுமையாகத்  தடை செய்துள்ளது.  இதனை மனிதாபிமான பேரழிவு என்று ஐ.நா.வர்ணிக்கிறது.

காஸாவை ஆளும் இஸ்லாமியக் குழுவான ஹமாஸை ஒழிப்பதே தங்களின் தலையாய நோக்கம் என்று இஸ்ரேல்  கூறுகிறது. இஸ்ரேலின் அழிவுக்கு சபதமேற்றுள்ள ஹமாஸ் போராளிகள்  கடந்தாண்டு  அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது  தாக்குதல் நடத்தி 1,200 பேரைக் கொன்றதோடு 240 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்தனர்.

தி ஹேக்கில் உள்ள அனைத்துலக  நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ள   தென்னாப்பிரிக்கா,    இஸ்ரேல் அரசு   1948ஆம் ஆண்டு  இனப்படுகொலை  மாநாட்டு விதிகளை  மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது. ஹோலோகாஸ்டில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சட்டம்  இயற்றப்பட்டது. இது போன்ற இனப்படுகொலைக் குற்றங்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது  என்பதை அனைத்து நாடுகளுக்கும் இந்த சட்டம் நினைவுறுத்துகிறது .


Pengarang :