MEDIA STATEMENTNATIONAL

புருவாஸ் எம்.பி. வீட்டில் தீச்சம்பவம்-  சந்தேகப் பேர்வழியின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

ஈப்போ, ஜன  16 – ஜனவரி 10 ஆம் தேதி அயர் தவாரில் உள்ள புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாமின் வீட்டில் தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிரான தடுப்புக் காவல்  நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கான  விண்ணப்பத்தை இன்று காலை ஸ்ரீ மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹாசன் பஸ்ரி  கூறினார்.

இந்த வழக்கில் சந்தேக நபரின் ஈடுபாடு எந்த  அளவுக்கு இருந்தது என்பதைக் கண்டறிய நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்துவோம்  என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்

இந்த தீச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மேற்கொண்ட தடயவியல் விசாரணையின் முடிவும் விசாரணையின்போது கவனத்தில் கொள்ளப்படும்  என்றும் யுஸ்ரி சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ஷா ஆலமில் 30 வயது நபர் கைது செய்யப்பட்டார்.  தீயிடல் மூலம் சதிநாசச் செயலில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக  தண்டனைச் சட்டத்தின் 435 வது பிரிவின் கீழ்  இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 10ஆம் தேதி  அதிகாலை நடந்த அத்தீயிடல்  சம்பவத்தில் டத்தோ  ங்கே வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மூன்று கார்கள் சேதமடைந்தன


Pengarang :