கோலா சிலாங்கூர், ஜன 17 – நாடு முழுவதும் உள்ள அறுபது சிறைகளில் தற்போது சுமார் 75,000 கைதிகள் உள்ளனர். இது 71,000 கைதிகளின் வரம்பை மீறி உள்ளது.

சிறைச்சாலைகளில் 5.6 சதவீதத்தைத் தாண்டி கைதிகளின் எண்ணிக்கை, சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது என்று சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் டத்தோ நோர் டின் முகமட் கூறினார்.

கட்டாய வருகை ஆணை, பரோல் மற்றும் கைதிகள் உரிமம் பெற்ற விடுதலை (பிபிஎஸ்எல்) திட்டங்கள் மூலம் சமூகத்தில் மறுவாழ்வு பெறும் கிட்டத்தட்ட 4,000 கைதிகள் இதில் சேர்க்கப்பட வில்லை என்று அவர் கூறினார்.

“குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் மலேசிய சிறை துறையின் தற்போதைய வெற்றி விகிதம் 82.4 சதவீதமாக உள்ளது, அதாவது அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, மூன்று வருட காலத்திற்குள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடமாட்டார்கள்.”

புஞ்சாக் ஆலம் சீர்திருத்த மையத்திற்கு வருகை புரிந்த சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவிடம் விளக்கமளிக்கும் போது நோர்டின் முகமட் இவ்வாறு கூறினார்.

மையத்தின் ஒருமைப்பாடு நிறுவனத்தில் உள்ள வகுப்புகளுக்கு சென்று, கைதிகளின் “பிலா அனாக் லாவுட் பெர்டோவா“ என்ற இசை நாடக நிகழ்ச்சியைத் தெங்கு அமீர் ஷா கண்டு களித்தார்.