NATIONAL

லைசென்ஸ் இன்றி செயல்பட்ட மருந்தக உரிமையாளருக்கு வெ.1,200 அபராதம்

ஷா ஆலம், ஜன 18 – முறையான வர்த்தக உரிமம் இன்றி
செயல்பட்டதற்காக மருந்தக உரிமையாளர் ஒருவர் நேற்று தெலுக் டத்தோ
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அந்த கடை உரிமையாளருக்கு எதிராக 2007ஆம் ஆண்டு கோல லங்காட்
நகராண்மைக் கழகத் துணைச் சட்டத்தின் பிரிவு 3, வர்த்தக மற்றும்
தொழில்துறை லைசென்ஸ் துணைச் சட்டம் ஆகியவற்றின் கீழ்
குற்றஞ்சாட்டப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான குற்றஞ்சாட்டப்பட்ட அந்நபர்
மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத்
தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று  நகராண்மைக் கழகம் தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இக்குற்றத்திற்காக அந்த வர்த்தகருக்கு 1,200 வெள்ளி அபராதம் விதித்த
மாஜிஸ்திரேட், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் இரு மாதச்
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்திய அந்த வணிகர்
நகராண்மைக் கழகம் வெளியிட்ட குற்றப்பதிவுகளுக்குச் செலுத்த வேண்டிய
2,000 வெள்ளி அபராதத் தொகையையும் செலுத்தினார்.

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைமை புரோசிகியூஷன்
அதிகாரி ஹரிசால் அப்துல் ரஹிம் மற்றும் புரோசிகியூஷன் அதிகாரி
அகமது ரசாலி அப்துல் மானாப் ஆகியோர் இந்த வழக்கை நடத்தினர்.


Pengarang :