ANTARABANGSA

ஒரே சீனா கொள்கையை மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும்- விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, ஜன 18 – சீனாவுடனான அரசதந்திர உறவுகளை நிறுவி இவ்வாண்டுடன்  50 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ‘ஒரே சீனா கொள்கை’க்கு மலேசியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டணிக்கு  அடிப்படையாக இருக்கும் “ஒரே சீனா கொள்கையை” மலேசியா எப்போதும் கடைப்பிடிக்கும் மற்றும் தொடரும் என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) வலியுறுத்தியது.

இப்பொன்விழா  நிறைவை நினைவு கூறும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்குத்  திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. இதில் உயர்மட்ட தலைவர்களின் வருகைப் பரிமாற்றங்கள், நினைவுத் தபால் தலை வெளியீடு, வணிக மன்றங்கள்/கலந்துரையாடல்  மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவையும் அடங்கும்.

கடந்த 2013ஆம் ஆண்டில்  இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகள் விரிவான விவேக பங்காளித்துவ நிலைக்கு (சி.எஸ்.பி. ) உயர்த்தப்பட்டன.

சி எஸ்.பி.யின் 10வது ஆண்டு நிறைவையொட்டி  கடந்தாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சீனாவின் 14வது தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி  மேற்கொண்ட பயணங்களின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.

பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்ட மலேசியா-சீனா உறவுகளுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் அளித்துள்ள முக்கியத்துவத்தை இது பிரதிபலிக்கிறது என்று விஸ்மா புத்ரா வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :