NATIONAL

அழகு சாதனப் பெட்டிகளில் வெ.12.2 லட்சம் போதைப் பொருள்- பிரஞ்சுப் பிரஜை கைது

புத்ராஜெயா, ஜன 18 – சுமார் 12 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள
6.13 கிலோ போதைப் பொருளைக் கடத்தும் முயற்சியை அரச மலேசிய
சுங்கத் துறை முறியடித்தது.

சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இச்சோதனையில் பயணப் பெட்டியில் அந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டின் சாவ்பாலோ நகரிலிருந்து விமானத்தில் வந்த பிரஞ்சுப்
பயணி ஒருவரிடம் சோதனையிட்ட போது அழகுசாதனப் பொருள்கள்
அடங்கிய ஏழு பெட்டிகளில் பல்வேறு வர்ணங்களில் சோப்பு போன்ற
பொருள் வைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டனர் என்று சுங்கத்
துறையின் மத்திய பிராந்தியத்திற்கான அமலாக்க நடவடிக்கை இயக்குநர்
வோங் புன் சியான் கூறினார்.

சோப்பு போன்ற அந்தக் கட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
அவை கொக்கேய்ன் போதைப் பொருள் எனத் தெரிய வந்தது என நேற்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காகச் சோப்பு வடிவிலான
அந்த போதைப் பொருளை அழகுசாதனப் பெட்டிகளில் மறைத்து கொண்டு
வருவது போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பாணியாகும் எனக் கூறிய
அவர், நாடுகளைத் தனியாகச் சுற்றிப் பார்ப்பதை பொழுதுபோக்காகக்
கொண்ட அந்நபர் அப்பெட்டியை சரக்குப் பிரிவில் சேர்க்காமல் தன்
கையில் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்நபருக்கு எதிராக 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்குக் கட்டாய மரணத் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்டாத பட்சத்தில் ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படி வழக்கப்படும்.


Pengarang :