NATIONAL

கேமரன் மலை நிலச்சரிவு தொடர்பான முழு அறிக்கைக்கு அமைச்சு காத்திருக்கிறது

பட்டர்வொர்த், ஜன 29 – ஐவரைக் பலிகொண்ட கேமரன் மலை நிலச்சரிவு
சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கைக்காக இயற்கை வளம் மற்றும்
சுற்றுசூழல் நிலைத்தன்மை அமைச்சு காத்திருப்பதாக அதன் அமைச்சர் நிக்
நஸ்மி நிக் அகமது கூறினார்.

இது போன்ற பேரிடர்கள் எதிர்காலத்தில் நிகழாதிருப்பதை உறுதி செய்ய
இவ்விவகாரத்திற்குத்  தீர்வு காண அமைச்சு தீவிர நடவடிக்கை
மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை
எடுப்பதற்கு முன்னர் அந்த பேரிடர் தொடர்பான முழுமையான
அறிக்கைக்காக அமைச்சு காத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஊராட்சி மன்றங்கள், மாநில அரசு மற்றும் இதர தரப்பினருடன் இணைந்து
அமைச்சு தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன்
தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் தெரிவிப்போம்
என்றார் அவர்.

அமைச்சின் நிலையில் கனிம புவி அறிவியல் மற்றும் வனத்துறை இந்த
ஆய்வில் ஈடுபட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள்
நிகழாதிருப்பதை உறுதி செய்ய இந்த விவகாரம் மீது தீவிர கவனம்
செலுத்தப்படுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள தாமான் செகாரில் கெஅடிலான் கட்சி அலுவலகத்தின் திறப்பு
விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் அக்கட்சியின் உதவித்
தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் கேமரன் மலை,
புளுவேலியில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில் ஐந்து மியன்மார்
பிரஜைகள் உயிரிழந்தனர்.


Pengarang :