SELANGOR

சுங்கை பூலோ தொகுதியில் சமூகப் பணிகளுக்குக் கடந்தாண்டு வெ.11 லட்சம் ஒதுக்கீடு

சுங்கை பூலோ, ஜன 29 – சுங்கை பூலோ தொகுதிக்குக் கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட அரசாங்க மானியத்தில் 29 விழுக்காடு அல்லது 11 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி சமூக நலப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டதாகத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

மக்களுக்கு பயன்தரக் கூடிய சமூக நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டதாகத் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அவர் தெரிவித்தார்.

பல்லின மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் அவர்களின் நலன் காப்பதிலும் அரசு சாரா அமைப்புகள் ஆக்ககரமான பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விரைவில் கொண்டாடப் படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு 150 மூத்த குடிமக்களுக்குப் பெருநாள் பரிசு மற்றும் அங்காவ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில் மடாணி அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கேற்ப இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :