SELANGOR

தகுதியானர்களுக்கு மட்டுமே சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்ய ஐ.எஸ்.எஸ். உறுப்பினர் தகுதி புதுப்பிப்பு

ஷா ஆலம், ஜன 30 – தகுதி உள்ளவர்கள் மட்டுமே மாநில அரசின் சுகாதார
பாதுகாப்புத் திட்டத்தின் வழி பயன்பெறுவதை உறுதி செய்ய இல்திஸாம்
சிலாங்கூர் சிஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்ட பயனாளிகளின் விபரங்கள்
புதுப்பிக்கப்படவுள்ளன.

ஈராண்டுகளுக்கும் மேற்பட்ட காப்புறுதி பாலிசியைக் கொண்ட
உறுப்பினர்கள் மற்றும் கடந்தாண்டு டிசம்பர் 20ஆம் தேதி வரையிலான
பாலிசியைக் கொண்டவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கு இந்த உறுப்பினர்
தகுதி புதுப்பிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

ஈராண்டுகளுக்கும் மேற்பட்ட பாலிசிகளைக் கொண்டிருப்பவர்கள்
நிர்ணயிக்கப்பட்ட்ட தகுதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் எதிர்வரும்
பிப்ரவரி முதல் தேதி தொடங்கி புதிதாக விண்ணப்பம் செய்யலாம் என்றும்
அவர் சொன்னார்.

ஈராண்டுகளுக்குக் குறைவான பாலிசிகளைக் கொண்டிருப்பவர்கள்
ஐ.எஸ்.எஸ். உறுப்பினர் தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஏதுவாக
தங்களின் விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்
கொண்டார்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஆக்கத்திறன் மற்றும் உயர்நெறியை
அரசாங்கம் நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவித் தேவைப்படும் தரப்பினர்
மட்டும் ஐ.எஸ்.எஸ். திட்டம் மூலம் பயன் பெறுவதை உறுதி செய்யவும்
இயலும் என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட அரசு துறைகள் தரவுகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக புதிய
உறுப்பினர் பதிவு மற்றும் அங்கீகாரம் தற்காலிகாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைளை தொகுதி மக்கள் சேவை
மையங்கள் அல்லது செலங்கா செயலி வாயிலாக மேற்கொள்ளலாம்
என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரப் பாலிசிகளைக் கொண்டிருப்பவர்கள் தனியார் கிளினிக்குகளில்
சிகிச்சைப் பெற உதவும் வகையில் ஐ.எஸ்.எஸ். திட்ட அமலாக்கத்திற்காக
மாநில அரசு இவ்வாண்ட வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடியே 50 லட்சம்
வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :