NATIONAL

திரங்கானு, பகாங்கில் உள்ள மூன்று வெள்ள நிவாரண மையங்களில் 495 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், ஜன 30 – ஜோகூர் மாநிலம் வெள்ள பாதிப்பிலிருந்து
முழுமையாக மீண்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு
திரும்பிய நிலையில் அங்குள்ள எல்லா வெள்ள நிவாரண மையங்களும்
மூடப்பட்டன.

எனினும், இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி திரங்கானு மற்றும்
பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில்
495 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.

திரங்கானு மாநிலத்தின் டுங்குன் மாவட்டத்திலிலுள்ள இரு துயர் துடைப்பு
மையங்களில் 157 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேர் தங்கியுள்ளதாக தேசிய
பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) தேசிய பேரிடர் நடவடிக்கை
குழு கூறியது.

பகாங் மாநிலத்தின் ரொம்பினில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில்
ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக அது
தெரிவித்தது.

ஜோகூர், கெடா, பெர்லிஸ், பகாங், சபா, திரங்கானு ஆகிய மாநிலங்களில்
உள்ள பல ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதை வடிகால்
மற்றும் நீர்பாசனத் துறையின் டெலிமெட்ரி நிலையத்தின் தரவுகள்
காட்டுகின்றன.

வெள்ளம், மண் சரிவு மற்றும் பாலம் உடைந்தது உள்ளிட்ட
காரணங்களால் நாடு முழுவதும் உள்ள 18 சாலைகள் போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளதாக நட்மா கூறியது.


Pengarang :