NATIONAL

ஐந்தாண்டு தவணை காலம் பூர்த்தி- அல்-சுல்தான், துங்கு அஜிசா தம்பதியர் பகாங் புறப்பட்டனர்

சிப்பாங், ஜன 30 – மாமன்னராக அரியணை அமர்ந்து ஐந்து ஆண்டுகள்
பூர்த்தியான நிலையில் மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் ராஜா
பெர்மைசூரி அகோங் தம்பதியர் தங்களின் சொந்த மாநிலமான பகாங்கிற்கு
இன்று பயணமாகினர்.

இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா
ராயா காம்ப்ளெக்சில் நடைபெற்ற வழியனுப்புச் சடங்கில் மிகவும்
இறுக்கமான சூழல் நிலவியது.

கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டிற்கு அளப்பரிய சேவையை வழங்கியதோடு
இப்பணிக்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாமன்னர்
தம்பதியரை வழியனுப்ப வந்த அனைவரின் முகத்திலும் ஒருவித சோகம்
இழையோடியதைக் காண முடிந்தது.

இன்று காலை 10.20 மணியளவில் பூங்கா ராயா காம்ப்ளெக்ஸ் வந்தடைந்த
பேரரசர் தம்பதியரை சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின்
துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில்,
துணைப் பிரதமர்களாக டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி,
டத்தோஸ்ரீ பாடிலா யூசுப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் துங்கு அஜிசா தம்பதியர் இரு
யானைகளுடன் புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தனர். அதனைத்
தொடர்ந்து நடைபெற்ற மரியாதை அணிவகுப்பையும் அவர்கள் ஏற்றுக்
கொண்டனர்.

பின்னர் அவர்கள் பூங்கா ராயா அறையில் குழுமியிருந்தவர்களுடன்
கைக்குலுக்கினர். துங்கு அஜிசா பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்டு
கண்கலங்குவதைக் காண முடிந்தது.

சிறப்பு விமானத்தின் கதவின் அருகே நின்றவாறு பேரரசர் தம்பதியர்
கூட்டத்தினரை நோக்கி கையசைத்த போது மிகவும் இறுக்கமான மற்றும்
பிரிவின் சோகம் நிறைந்த சூழல் காணப்பட்டது.

பின்னர் அரச மலேசிய ஆகாயப்படையின் அந்த சிறப்பு விமானத்தின
கதவுகள் மூடப்பட்ட போது ‘டவுலாட் துவாங்கு‘ என்ற முழக்கம் மூன்று
முறை ஒலித்தது.


Pengarang :