NATIONAL

சமூக ஊடகங்கள் வழி போலி கைது ஆணை- பொது மக்களுக்குப் போலீஸ் எச்சரிக்கை

கோலாலாம்பூர், பிப் 1- வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம்
போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகக் கைது ஆணையை அனுப்பும்
மோசடிக் கும்பலின் புதிய அணுகுமுறையை அரச மலேசிய போலீஸ்
படை அடையாளம் கண்டுள்ளது.

‘வர்த்தக குற்றப்புலனாய்வத் துறையின் பி-19 குழுவின் சிறப்புப் பிரிவு‘
எனும் தலைப்பிலான அந்த கைது ஆணை புத்ரா ஜெயாவிலுள்ள கூட்டரசு
நீதிமன்ற தலைமைப் பதிவாதிகாரி அலுவலகத்தின் முகவரியை
கொண்டுள்ளதாகப் புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின்
துணை இயக்குநர் டத்தோ ரோஹாய்மி முகமது ஈசா கூறினார்.

அரச மலேசிய காவல் துறையால் அனுப்பப்படுவது போன்ற
தோற்றத்தைக் கொண்ட அந்த கைது ஆணை, குறிப்பிட்ட குற்றத்திற்காக
சம்பந்தப்பட்ட நபரை 24 மணி நேரத்தில் தடுத்து வைப்பதை நோக்கமாக
கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் காவல்
துறைக்கு வழங்கியுள்ளதாகவும் கைது செய்யப்படும் நபரை வழக்கறிஞர்
உள்பட எந்த தரப்பினரின் மூலமாகவும் ஜாமீன் எடுக்க இயலாது என்றும்
அந்த கைது ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

மேலும், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டப்
பின்னர் அவரின் பெயரில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டு பறிமுதல்
செய்யப்படும் என்பதோடு நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட
மாட்டார் என்று அதில் கூறப்பட்டிருப்பதாக டத்தோ ரோஹாய்மி அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

இத்தகைய கைது ஆணை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை
தெளிவுபடுத்திய அவர், இது புதிய பாணியிலான மோசடி நடவடிக்கையாக
விளங்குகிறது என்றார்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் இத்தகைய தகவல்கள் அல்லது
அறிமுகமில்லாத நபர்களின் தொலைபேசி அழைப்புகளைப் பின்பற்ற
வேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :