NATIONAL

சுங்கை சிலாங்கூர், சுங்கை செம்பாவில் கலங்கிய நிலையில் நீர்- லுவாஸ் அதிரடிச் சோதனை

ஷா ஆலம், பிப் 2- ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வரும்
நீர் நேற்றிரவு கலங்கலாக காணப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை சிலாங்கூர்
மற்றும் சுங்கை செம்பாபில் கண்காணிப்பு நடவடிக்கையை லுவாஸ்
எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.

ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையத்தில் வழக்கமாக நீரின் கலங்கல்
அளவு 500 என்.டி.யு.வாக இருக்கும் வேளையில் நேற்றிரவு 10.00
மணியளவில் அந்த அளவு 2,238ஆக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து
சுற்றுவட்டாரங்களில் சோதனை நடவடிக்கையை அந்த வாரியம் முடுக்கி
விட்டது.

அந்த நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அருகிலுள்ள் பகுதிகளில் லுவாஸ்
மேற்கொண்ட சோதனைகளில் நீரின் கலங்கல் அளவு 1,000 முதல் 2,000
என்.டி.யு, வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீர் சுத்திகரிப்பு மையத்தின் முக்கத்துவாரத்தில் உள்ள கலங்கலான நீரை
வெளியேற்றுவதற்கு ஏதுவாக ஆற்றின் மதகு கதவுகள் திறந்து
விடப்பட்டதோடு ஹோராஸ் 600 திட்டத்திலிருந்து மணிக்கு 30 கோடி
லிட்டர் நீரும் கோலாலம்பூர்-லாருட் மாற்றும் நீர் சேகரிப்பு குளத்திலிருந்து
மணிக்கு 19 கோடியே 20 லட்சம் லிட்டர் நீரும் வெளியேற்றப்பட்டன
என்று லுவாஸ் அறிக்கை ஒன்றில் கூறியது.

இதனிடையே, சுற்றுவட்டாரங்களில் உள்ள சுங்கை குண்டாங், சுங்கை
குவாங், சுங்கை செராய் போன்ற துணை நதிகள் மீது சோதனை
மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆறுகளில் நீரின் கலங்கல் அளவு 500
என்.டி.யு.வுக்கு கீழ் இருந்த்து என அது குறிப்பிட்டது.

சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை செம்பாவில் நேற்றிரவு முழுவதும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதோடு அந்த ஆறுகளிலுள்ள நீரின் கலங்கல் அளவைக் கண்டறிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றிரவு சுங்கை செம்பா பகுதியில் பெய்த கனத்த மழையின் காரணமாக
நீரின் கலங்கல் அளவு அதிகரித்தது சோதனையில் கண்டறியப்பட்டது
என்று லுவாஸ் தெரிவித்தது.


Pengarang :