NATIONAL

ரோந்துப் பணியை மேற்கொண்ட போது நிகழ்ந்த சம்பவம்- கார் மோதி போலீஸ்காரர் படுகாயம்

ஈப்போ, பிப் 5- ரோந்துப பணியை மேற்கொண்டிருந்த போலீஸ்காரர்களை
கார் மோதியது. ஜாலான் தஞ்சோங் ரம்புத்தான்- செமோர் சாலையில்
நேற்றிரவு 7.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் போலீஸ்காரர்
ஒருவர் காயமடைந்தார்.

முப்பத்து நான்கு வயதுடைய அந்த போலீஸ்காரர் தனது சகாவுடன்
குற்றத் தடுப்பு ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது இச்சம்பவம்
நிகழ்ந்ததாகப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி
ஹசான் பாஸ்ரி கூறினார்.

சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட புரோட்டோன்
இரிஸ் ரக கார் ஒன்றை அணுகி சோதனையிட அவ்விருவரும் முயன்ற
போது சந்தேகப் பேர்வழி தனது காரை வேகமாகப் பின்னோக்கி
நகர்த்தியதாக அவர் சொன்னார்.

காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த போலீஸ்காரர்
மோதுண்டு தரையில் விழுந்தார். காரை முன்னோக்கி நகர்த்திய காரோட்டி
மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாம் முறையாக அவரை மோதித்
தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினான் என்று யூஸ்ரி
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த மோதலின் காரணமாக அந்த போலீஸ்காரருக்குப் பலத்தக் காயங்கள்
ஏற்பட்டு உடலை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு விலா
எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டது தொடக்கக்
கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 307வது
பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட காரோட்டியை அடையாளம் காணும் முயற்சியில் தங்கள்
தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், தகவலறிந்த பொது மக்கள்
013-6282176 என்ற எண்களில் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின்
தலைமை விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. நோராசுனா ராய்ஸ் அகமது
அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளும்படி
கேட்டுக் கொண்டார்.


Pengarang :