NATIONAL

சீனப்புத்தாண்டை முன்னிட்டு பிப்.12 மற்றும் 13ஆம் தேதிகளில் கைதிகளைச் சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், பிப் 5 – சீனப்புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 12 மற்றும்
13ஆம் தேதிகளில் கைதிகளைச் சந்திக்க அவர்களின் குடும்பத்தினருக்குச்
சிறைச்சாலைத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நன்னடத்தை மறுவாழ்வு மையங்கள், சிறப்பு மறுவாழ்வு மையங்கள்,
சிறப்பு தடுப்புக் காவல் மையங்கள் மற்றும் ஹென்ரி கர்னி பள்ளி
ஆகியவற்றில் உள்ள கைதிகளைக் காண இந்த வாய்ப்பு வழங்கப்படும்
வேளையில் சீனக் கைதிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் என
சிறைச்சாலைத் துறை கூறியது.

கைதிகளை நேரில் சென்று சந்திப்பது அல்லது இயங்கலை வாயிலாக
சந்திப்பது (இணையம்/வீடியோ அழைப்பு) ஆகிய இரு வழிமுறைகளில்
ஒன்றை சம்பந்தப்ட்டவர்களின் குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கலாம்.
இயங்கலை வயிலாக மேற்கொள்ளப்படும் சந்திப்புகள் பிப்ரவரி 14 முதல்
16 வரை மூன்று நாட்களுக்கு அமலில் இருக்கும்.

கைதிகளை நேரில் சந்திக்க விரும்புவோர் நிர்ணயிக்கப்பட்ட
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். காலை 8.15 மணி முதல்
மாலை 4.15 மணி மட்டுமே சந்திக்க முடியும் என்பதோடு ஆர்.டி.-பி.சி.ஆர்.
அல்லது ஏ.ஆர்.டி.கே.-ஏஜி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சோதனைக்குப்
பின் மூன்று நாட்கள் செல்லுபடியாகக் கூடிய முடிவுகளைக் கொண்டிருக்க
வேண்டும்.

மேலும், வருகை செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் கைதிகளின்
குடும்பத்தினர் வருகை அட்டை மற்றும் அடையாளக் கார்டை உடன்
கொண்டு வர வேண்டும்.

கைதிகளுக்குச் சிறைச்சாலைத் துறை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்
தந்துள்ளதால் அவர்களுக்கு உணவு மற்றும் பானங்களைக் கொண்டு வர
வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக கொள்ளப்படுகின்றனர்.

இந்த வருகை தொடர்பில் ஐ-விசிட் சிஸ்டம், தொலைபேசி அழைப்பு,
மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம்
வருகைக்கான முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கைதிகளைச் சந்திக்க
அனுமதிக்கப்படுவர்.


Pengarang :