NATIONAL

தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பியோடிய கைதிகளில் 54 பேர் மீண்டும் பிடிபட்டனர்

ஈப்போ, பிப் 5 – பீடோரில் உள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிக
தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவர்
சாலை விபத்தில் உயிரிழந்தார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 332.5 கிலோ மீட்டரில் நேற்றிரவு 9.20
மணியளவில் நிகழ்ந்த விபத்தில் அவ்வாடவர் பலியானதாக பேராக்
மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி
கூறினார்.

நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆடவரை நான்கு சக்கர இயக்க
வாகனம் மோதியதாகக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில் 1987ஆம்
ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை
நடத்தப்பட்டு வருவதாகச் சொன்னார்.

உயிரிழந்த அந்த மியன்மார் பிரஜையின் உடல் சவப் பரிசோதனைக்காகத்
தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர் பீடோர் தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பியவரா
என்பதை உறுதி செய்வதற்காகக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்
மருத்துவமனைக்கு விரைந்ததாகவும் அவர் சொன்னார்.

இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் விசாரணைக்கு உதவும் பொருட்டு
தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சாலை போக்குவரத்து
விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பி.பிரதிபராஜை 014-6178095 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, தப்பியோடிய கைதிகளில் மேலும் மூவர் இன்று காலை
தாப்பா வட்டாரத்தில் கைது செய்யப்பட்டத் தகவலையும் அவர்
வெளியிட்டார். இந்த மூவருடன் சேர்த்து இன்று காலை 8.00 மணி வரை கைது செய்யப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தாப்பா, பெல்கிரா ஜாலான்
காச்சுவில் நேற்றிரவு 9.45 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்
என்று அவர் கூறினார்.


Pengarang :