SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டராக முகமது ஜாஹ்ரி நியமனம்

பெட்டாலிங் ஜெயா, பிப் 6 – பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏழாவது டத்தோ பண்டாராக முகமது ஜாஹ்ரி சாமிங்கோன் நியமிக்கப்பட்டார். அவரின் நியமனம் பிப்ரவரி முதலாம் தேதி அமலுக்கு வருகிறது.

பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் உயர் கல்வியமைச்சின் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து அவரின் இடத்தை முகமது ஜாஹ்ரி நிரப்புகிறார்.

தம்மீது நம்பிக்கை வைத்து பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திற்குத் தலைமையேற்கும் பொறுப்பை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முகமது ஜாஹ்ரி கூறினார்.

மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர் மன்ற ஊழியர்களின் துணையுடன் மாநில அரசின் தொலைநோக்குக் கொள்கைகள், முதலாவது சிலாங்கூர் திட்டம், மகத்தான கிள்ளான் பள்ளத்தாக்கு கொள்கை மற்றும் நிர்வாக விவகாரங்களின் அமலாக்கத்தில் மாநில அரசுக்குத் துணையாக இருப்பேன் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், பெட்டாலிங் ஜெயாவின் செயலாக்கத் திறன் வலுப்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுப்பது, பொருளாதாரத் துறைகள் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவேன் என்றார் அவர்.

முன்னதாக, இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பதவி நியமனச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட அவர், உயர்நெறி வாக்குறுதியையும் வாசித்தார்.

தஞ்சோங் காராங்கை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஜாஹ்ரி, கடந்த 2021 முதல் இவ்வாண்டு ஜனவரி வரை மாநில தலைமைச் செயலகத்தில் மேலாண்மைப் பிரிவுக்கான துணை அரசாங்கச் செயலாளராகப் பதவி வகித்தார்.


Pengarang :