NATIONAL

காப்பார் விமான விபத்து- இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

கிள்ளான், பிப் 15 – காப்பாரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இலகு ரக
விமான விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் சவப்பரிசோதனக்குப்
பிறகு அவர்களின் குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.

துணை விமானியான 43 வயது ரோஷான் சிங் ரைய்னாவின் உடல் நேற்று
மாலை 3.00 மணியளவில் அவரின் குடும்பத்தினரிடம்
ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோகூர் பாரு, சன்வே புக்கிட்
லெனாங்கில் உள்ள அவரது வீட்டிற்கு நல்லுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
ரோஷான் சிங்கின் நல்லடக்கச் சடங்கு இன்று நடைபெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அந்த விமானத்தின் விமானியான 31 வயது டேனியல் யீ
சியாங் கூனின் நல்லுடலை அவரின் குடும்பத்தினர் கிள்ளான், தெங்கு
அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து நேற்று
பெற்றுச் சென்றனர். நல்லடக்கச் சடங்கிற்காக அவரது உடல் சுங்கை பீசி,
நிர்வாணா நினைவார்த்த மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

விமான விபத்தின் காரணமாக உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்களால்
அவ்விருவரும் உயிரிழந்தது சவப்பரிசோதனையில் தெரிய வந்ததாக வட
கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.விஜயராவ் கூறினார்.

அவ்விருவரும் பயணம் செய்த பி.கே.160 கேப்ரியல் ரக இலகு விமானம்
காப்பார், கம்போங் தோக் மூடாவில் நேற்று முன்தினம்
விபத்துக்குள்ளானது. அவ்விருவரின் உடல்களும் கோக்பிட் எனப்படும்
விமானியின் அறையுடன் செம்பனைத் தோட்டத்தில் சுமார் 2 மீட்டர்
ஆழத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.


Pengarang :