NATIONAL

இவ்வாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.3 விழுக்காடாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு

கோலாலம்பூர், பிப் 19 – நாட்டின் நிதிப் பற்றாக்குறையை இவ்வாண்டில் 4.3
விழுக்காடாகக் குறைக்க ஒற்றுமை அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளும்
என்று தொலைத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

கடந்தாண்டில் வெளிப்புறச் சூழல்களால் ஏற்பட்ட சவால்களுக்கு
மத்தியிலும் 2023 நான்காம் காலாண்டில் மூன்று விழுக்காட்டு மொத்த
உள்நாட்டு உற்பத்தியை மலேசியா பதிவு செய்ததாக ஒற்றுமை
அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் தெரிவித்தார்.

நாடு சரியான பொருளாதாரத் தடத்தில் பயணிப்பதை உறுதி செய்வதற்கு
முதலீடு, வேலை வாய்ப்பு மற்றும் பொருள் விலைக்கட்டுப்பாடு ஆகிய
மூன்று அடிப்படை அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
என்று அவர் சொன்னார்.

இந்த மூன்று அடிப்படை அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன்
வாயிலாக நாம் சரியான பொருளாதாரத் தடத்தில் பயணிப்பதற்குரிய
வாய்ப்பு கிட்டியுள்ளது. வேலையில்லா விகிதம் இறக்கம் கண்டு,
பணவீக்கம் குறைந்து, அந்நிய நேரடி முதலீடுகளும் அதிகரித்துள்ளன
என்று அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், நிதிப்பற்றாக்குறையும் குறைந்துள்ளது. கடந்த 2022ஆம்
ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மிக அதிகமாக அதாவது 5.6 விழுக்காடாக
இருந்தது. தற்போது அது 5.0 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இவ்வாண்டில்
அந்த எண்ணிக்கையை 4.3 விழுக்காடாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்
என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

மொத்தம் 1,710 கோடி வெள்ளி அந்நிய நேரடி முதலீடு உள்பட 2023
நான்காம் காலாண்டில் நாடு அடைந்துள்ள பொருளாதார மேம்பாடுகளை
விவரிக்கும் விளக்கப் படம் ஒன்றையும் அவர் அப்பதிவில் பகிர்ந்து
கொண்டுள்ளார்.


Pengarang :