NATIONAL

கலைஞர்கள், ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் செயல்முறைகளை வலுப்படுத்த அரசு திட்டம்

கோலாலம்பூர், பிப் 19 – நாட்டிலுள்ள கலைத்துறை இயக்கவாதிகள் மற்றும்
ஊடகங்களில் பகுதி நேரமாகப் பணிபுரிவோரின் பாதுகாப்பை மேம்படுத்தும்
முயற்சியின் ஒரு பகுதியாக பல்வேறு செயல்முறைகளை அரசாங்கம்
ஆராய்ந்து வருவதாகத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்
கூறினார்.

சுயத் தொழில் செய்வோருக்காகச் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு
நிறுவனத்தின் கீழுள்ள திட்டங்களில் பங்கேற்பதற்குரிய வாயப்பினை
வழங்குவதன் மூலம் முடத்தன்மை நலப் பயன் மற்றும் உயிர் மீண்டவர்
பென்ஷன் அனுகூலம் ஆகியவற்றை பெறுவதற்குரிய வாய்ப்பினை
அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதும் இதில் அடங்கும் என்று அவர்
சொன்னார்.

சொக்சோவின் மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனத்தில்
கொள்ள வேண்டியுள்ளதால் இதன் தொடர்பான பரிசீலனை இன்னும்
பூர்வாங்க கட்டத்திலேயே உள்ளது. இதன் தொடர்பில் நாளை மனிதவள
அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் மற்றும் சொக்சோ அதிகாரிகளுடன்
நான் சந்திப்பு நடத்தவிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்காக நாங்கள் நடத்தும் முதலாவது
அதிகாரப்பூர்வச் சந்திப்பாக இது விளங்குகிறது. வெகு விரைவில்
கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்புத் தொழில்துறையினர்
ஊடகவியலாளர்கள், இ-ஹெய்லிங் சேவை வழங்குநர்களுக்கு நற்செய்தி
வரும் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி
நிலையிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனைப்
பாதுகாப்பதற்கான திட்டங்களை மேம்படுத்துவதற்கு மடாணி அரசாங்கம்
பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதாக நேற்று கூறியிருந்தது
தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு சொன்னார்.


Pengarang :