NATIONAL

போக்குவரத்து குற்றங்களுக்காக அந்நிய நாட்டினருக்கு 781 குற்றப்பதிவுகள்- ஜே.பி.ஜே. தகவல்

கோல திரங்கானு, பிப் 21- இவ்வாண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு 20
நாட்களுக்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பெருநாள் கால
சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக
அந்நிய நாட்டினருக்கு 781 குற்ற அறிக்கைகளை சாலை போக்குவரத்து
இலாகா (ஜே.பி.ஜே.) வழங்கியது.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது முறையான ஆவணங்களைக்
கொண்டிராத காரணத்திற்காக 781 வாகனங்களை ஜே.பி.ஜே. பறிமுதல்
செய்ததாக அத்துறையின் அமலாக்கத் துறையின் முதன்மை இயக்குநர்
டத்தோ லோக்மான் ஜமஹான் கூறினார்.

அக்காலக்கட்டத்தில் அந்நிய நாட்டினர் பயன்படுத்திய 2,500 வாகனங்களை
நாங்கள் சோதனையிட்டோம். திரங்கானு மாநிலத்தில் மட்டும் பல்வேறு
குற்றங்களைப் புரிந்த 281 வாகனங்களை அடையாளம் கண்டோம் என்றார்
அவர்.

மியன்மார், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளே இத்தகைய
குற்றங்களை அதிகம் புரிகின்றனர் என்று நேற்று இங்கு நடைபெற்ற சிறப்பு
மோட்டார் சைக்கிள் சோதனை நடவடிக்கை தொடர்பான செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அந்நிய நாட்டினருக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் அல்லது
விற்கும் உள்நாட்டினருக்கு தாம் கடுமையான எச்சரிக்கையை விடுக்க
விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

இத்தகைய குற்றங்களைப் புரிவோரின் பெயர் கருப்புப் பட்டியிலிடுவது
உள்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை பெரும் விவகாரமாக
உருவெடுத்துள்ளதோடு இதன் தொடர்பில் தாங்கள் அதிகமான புகார்களைப்
பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாண்டு சீனப்புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை
நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 63,414 குற்ற அறிக்கைகளை
ஜே.பி.ஜே. வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :