NATIONAL

பழைய  குழாய்களை மாற்றுவதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி தேவை- ஸ்பான் பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, பிப் 22- பயனற்றுப் போகும் நீர் மேலாண்மை (என்.டபள்யு.ஆர்.) பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு வருடாந்திர நிதியாக 1,000 கோடி வெள்ளியை மாநில அரசுகளுக்கு  வழங்க வேண்டும் என்று தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) பரிந்துரைத்துள்ளது.

பயன் தராமல் போகும் நீர் பிரச்சினையால் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 800 கோடி வெள்ளியை இழந்துள்ள வேளையில் அந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

இந்த பயனற்றுப் போகும் நீர் சிக்கலை நாம்  தீர்க்கவில்லை என்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 2,000 கோடி வெள்ளியை இழக்க நேரிடும். இது பெருமைப்படத்தக்க விஷயமல்ல என்று அவர் சொன்னார் .

பயனற்றுப் போகும் நீரின் அளவைக் குறைப்பதற்கு ஏதுவாக மாநிலங்களில்  பழுதடைந்த குழாய்களை  மாற்றுவதற்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 1,000 கோடி வெள்ளி நிதியை அரசாங்கம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்  என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இங்குள்ள ஜெயா ஒன் ஷாப்பிங் சென்டரில் உள்ள பிஜே லைவ் ஆர்ட்ஸில் நடைபெற்ற உலக வெப்ப மயம்  மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வரங்கில் பேச்சாளராகக் கலந்து   கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

பெர்லிஸ் மாநிலம் மிக அதிகமாக அதாவது  68 விழுக்காடு  பயனற்றுப் போகும் நீரின் அளவைப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய சார்ல்ஸ்,  சிலாங்கூர், பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்கள்  திறமையாக நிர்வகித்து வீணாகும் நீரின் அளவை 28 விழுக்காடாகக் குறைத்துள்ளன என்றார்.

அடிப்படைத் தேவையாக விளங்கும் நீர்  நீர்  தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாகவும் விளங்குகிறது.  அதனை நிர்வகிக்கும் பொறுப்பு பின்னணி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது என்பது தெளிவாகிறது என்றார் அவர்.

ஒரு பயனீட்டாளர் ஒரு நாளைக்குச் சராசரி  165 லிட்டர் நீரைப் பயன்படுத்த   ஐக்கிய நாடுகள் சபை அளவு நிர்ணயித்துள்ள நிலையில்  மக்கள்  தேவைக்கு அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலர் தினமும் தங்கள் காரைக் கழுவ விரும்புகின்றனர். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறை அல்ல. உலகம் கடுமையான பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதால் நாம் எப்போதும் தண்ணீரை வீணடிக்க முடியாது என்று அவர் கூறினார்.


Pengarang :