NATIONAL

படகு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் நீரில் மூழ்கினார்

பட்டர்வொர்த், பிப் 23: நேற்று இரவு, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) மாக் மண்டின் ஜெட்டியில் படகு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் நீரில் மூழ்கினார்.

பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நீர் மீட்புக் குழுவின் (பிபிடிஏ) உறுப்பினராகவும் உள்ள முகமட் இஸ்வான் இலியாஸ் (42), இரவு 10 மணியளவில் பாதுகாப்பு படகைப் பராமரிக்கும் போது அப்பகுதியில் உள்ள ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து இரவு 10.20 மணி அளவில் தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உறுப்பினர்களைக் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பியதாகவும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குனர் கைரி சுலைமான் கூறினார்.

“மேற்பார்வையாளர்கள் சோதனைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் படகில் இல்லாததைக் கண்டறிந்தனர். மேலும், அவரின் அலறல் சத்தம் கேட்டது,” என்று கைரி சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :