NATIONAL

தலைமறைவாக இருந்து வரும் 30 அந்நியக் கைதிகளைத் தேடும் பணி தொடர்கிறது

புத்ராஜெயா, பிப் 28 – பீடோரில் உள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிகத்
தடுப்புக் காவல் முகாமிலிருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தப்பியோடிய
அந்நிய கைதிகளில் இன்னும் தலைமறைவாக இருந்து வரும் பேரைத்
தேடும் பணி இன்னும் தொடர்கிறது.

அவர்கள் அனைவரும் இன்னும் பேராக் மாநிலத்தில் குறிப்பாக தங்கள்
சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் தலைமறைவாக இருக்கக்கூடும் என
தாங்கள் சந்தேகிப்பதாகக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்
டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

எஞ்சிய முப்பது சட்டவிரோதக் குடியேறிகளை நாங்கள் தொடர்ந்து தேடி
வருகிறோம். அவர்கள் தங்கள் சமூகத்தினருடன் இருக்கக்கூடும் என
நம்புகிறோம். எங்களின் சோதனை நடவடிக்கைகளில் அந்நிய நாட்டினரின்
குறிப்பாக ரோஹிங்கியாக்களின் குடியிருப்பு பகுதிகள் முக்கிய இலக்காக
விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அந்நிய நாட்டினருக்கு எதிராக சோதனை மேற்கொள்ளும் ஒவ்வொரு
முறையும் பிடிபடுவோரின் கைரேகைகள் சோதனையிடப்படுகின்றன. முக
அடையாளத்தைக் கொண்டு அவர்களை கண்டு பிடிப்பது சிரமமாக
உள்ளதால் கைரேகை சோதனையை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று
அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பீடோரில் உள்ள குடிநுழைவுத் துறையின்
தற்காலிகத் தடுப்புக் காவல் முகாமின் ஆண்கள் புளோக்கிலிருந்து 131
சட்டவிரோத அந்நியக் குடியேறிகள் தப்பினர். தப்பியோடியவர்களில்
ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தப்பியவர்களில் 115 ரோஹிங்கியாக்களும் 15 வங்காளதேசிகளும்
அடங்குவர்.


Pengarang :