NATIONAL

குழந்தையின் பிறப்புச் சடங்கு துயரமாக மாறியது- இரண்டு மாதக் குழந்தை சாலை விபத்தில் பலி

ஷா ஆலம், பிப் 28 – குழந்தையின் பிரசவத்தை கொண்டாடும் ‘அகிகா‘ நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் அந்த விழாவின் நாயகனான இரண்டு மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 184 வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகலில் நிகழ்ந்தது.

இந்த விபத்து நிகழ்ந்த போது முகமது சுபியான் முகமது ஷாஹிஸ்வான் என்ற அந்த குழந்தைக்கு ‘அகிகா‘ எனும் குழந்தையின் பிரசவ நிகழ்வைக் கொண்டாடுவதற்காக பெற்றோர் புத்ராஜெயா விலிருந்து குளுவாங்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

தலையிலும் உடம்பிலும் பலத்தக் காயங்களுக்குள்ளான அந்த குழந்தை மலாக்கா மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் உயிரிழந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நெடுஞ்சாலையில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார்களை ஏற்றிய டிரெய்லர், ஒரு லோரி, மூன்று கார்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர இயக்க வாகனம் ஆகியவற்றை இந்த விபத்து உள்ளடக்கியிருந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பரின்டெண்டன்ட்  அகமது ஜாமில் ரட்ஸி கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் அக்குழந்தையின் குடும்பத்தினர் பயணம் செய்த புரோடுவா அத்திவா ரகக் காரை மோதியதாக அவர் சொன்னார்.

இந்த விபத்தில் காரின் பின்புறம் குழந்தைக்கான இருக்கையில் இருந்த அக்குழந்தை பலத்தக் காயங்களுக்குள்ளான வேளையில் பெற்றோரும் மூன்று வயது மகனும் காயமின்றித் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த டிரெய்லர் பின்னர் மேலும் நான்கு வாகனங்களை மோதித் தள்ளியதாக கூறிய அவர், இவ்விபத்தில் அதன் ஓட்டுநர்களும் பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர் என்றார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநர் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :