NATIONAL

 கேபிள் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

ஈப்போ, பிப் 28: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தாமான் ஈப்போ ஜெயா பகுதியில் கேபிள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடு பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

மேலும், 38 முதல் 42 வயதுக்குட்பட்ட அனைவரும் பாடாங் செராய் மற்றும் கெடாவின் சுங்கை பட்டாணி ஆகிய இடங்களில் கைது செய்யப் பட்டதாகப் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.

“பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் தொயோத்தா ஹைலக்ஸ் நான்கு சக்கர வாகனத்தில் இருந்த நபர்களைக் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

“வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வரை வாகனத்தை துரத்துவதற்குப் பல காவல்துறை ரோந்து கார்கள் நியமிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் தப்பித்து விட்டனர் ,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பின், பாடாங் செராய் மற்றும் சுங்கை பட்டாணி ஆகிய இடங்களில் அந்த நான்கு பேரைக் காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்தது.

விசாரணையின் விளைவாக, அவர்கள் நகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர் என்றார்.

அவர்களிடம் இருந்து கேபிள் திருட்டு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல்வேறு உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அனைத்து நபர்களும் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை உட்கொண்டிருப்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் தண்டனைச் சட்டப் பிரிவு 379 மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவு 186 இன் கீழ் விசாரணைக்காக மார்ச் 1 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

– பெர்னாமா


Pengarang :