NATIONAL

பாலஸ்தீன ஆதரவுப் பேரணிக்கு அனுமதியா? போலீசார் மறுப்பு

கோலாலம்பூர், பிப் 28 – “பாலஸ்தீனத்திற்கான மெகா மக்கள் பேரணியை“
நடத்துவதற்கான பெர்மிட்டை தாங்கள் வழங்கியதாகவோ அல்லது
அங்கீகரித்துள்ளதாகவோ பாலஸ்தீன ஒருமைப்பாட்டுச் செயலகம்
(எஸ்.எஸ்.பி.) கூறியிருப்பதை காவல் துறை மறுத்துள்ளது.

இம்மாதம் 27ஆம் தேதி வரை இந்த பேரணி தொடர்பான எந்த
விண்ணப்பத்தையும் ஏற்பாட்டாளர்கள் சமர்பிக்கவில்லை என்று வங்சா
மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு
சமா கூறினார்.

எனினும், இந்தப் பேரணி தொடர்பில் வங்சா மாஜூ மாவட்ட போலீஸ்
தலைமையகத்தின் அதிகாரிகள் பேரணி ஏற்பாட்டாளர்களுடன் கடந்த
22ஆம் தேதி சந்திப்பு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

அப்பேரணி தொடர்பில் அறிவிப்பு அல்லது பெர்மிட் விண்ணப்பத்தை
வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைமையகத்திடம் சமர்ப்பிக்கும்படி
அக்கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனைக் கூறப்பட்டது என்று
அவர் சொன்னார்.

முறையான அனுமதியின்றி எந்த பேரணிகளையும் நடத்தவோ
ஒன்றுகூடவோ வேண்டாம் என்று பொதுமக்களை  இன்று
வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.

விதிமுறைகளைப் பின்பற்றாத அல்லது விதிகளை மீறி நடக்கும்
தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார்.


Pengarang :