NATIONAL

அதிக விபத்துகளைச் சம்பந்தப்படுத்திய 6,000 முதலாளிகள் மீது சொக்சோ தீவிரக் கண்காணிப்பு

கோலாலம்பூர், பிப் 28 – கடந்தாண்டில் அதிக விபத்துகளைப் பதிவு செய்த
6,000 முதலாளிகளை ‘ஓப் செகா‘ எனும் நடவடிக்கையின் வாயிலாகச் சமூக
பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) கண்காணிக்கவுள்ளது.

விரும்பத்தகாத சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகத்
தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், கடிதங்கள், ஒருவருடன்
ஒருவர் எனும் நேரடி ஆலோசகச் சேவைகள், பணியிடங்களுக்கு வருகை
ஆலோசகச் சேவைகள் ஆகிய நடவடிக்கைகளின் வாயிலாக இந்த
கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று சொக்சோ அறிக்கை
ஒன்றில் கூறியது.

விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக அரசு சாரா
அமைப்புகளுடனான வியூக பங்காளித்துவத்தின் வழி சொக்சோ
கடந்தாண்டு 1,078 முதலாளிகளைச் சந்தித்ததாக அது தெரிவித்தது.

இந்த சந்திப்புகளின் விளைவாக 931 முதலாளிகள் மத்தியில் விபத்துகளின்
எண்ணிக்கை 83.6 விழுக்காடாக குறைந்தது. அந்த விவேகப் பங்காளித்துவம்
உரிய பயனைத் தந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவ்வறிக்கை
மேலும் குறிப்பிட்டது.

அதிக விபத்துகளைப் அதாவது 44,856 அல்லது 46.6 விழுக்காட்டு
விபத்துகளைப் பதிவு செய்த 6,000 முதலாளிகளை உள்ளடக்கிய அந்த
கண்காணிப்பு ‘ஓப் செகா‘ நடவடிக்கையின் வாயிலாக 2024ஆம் ஆண்டிலும்
தொடரும் என அது தெரிவித்தது.


Pengarang :