NATIONAL

கவுன்சிலர்களாக நிபுணர்கள் நியமனம் – அவசரத்தில் முடிவு எடுக்கப்படாது

ஷா ஆலம், பிப் 28 – ஊராட்சி மன்றங்களில் நியமிக்கப்படும்
கவுன்சிலர்களில் 50 விழுக்காட்டினர் தொழில் நிபுணர்களாக இருக்க
வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷாவின் பரிந்துரையை நிறைவேற்றும் கடப்பாட்டை மாநில
அரசு கொண்டுள்ளது. எனினும், அந்த பரிந்துரை கட்டங் கட்டமாக
மேற்கொள்ளப்படும்.

இந்த பதவிக்குப் பொருத்தமான வேட்பாளர்கள் நியமிக்கப்படுவதை உறுதி
செய்ய வேண்டும் என்பதால் இந்த நியமனங்கள் அவசர கதியிலோ
அல்லது தன்னிச்சையாகவோ மேற்கொள்ளப்படாது என்று ஊராட்சி
மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம்
கூறினார்.

இவ்விவகாரம் மீது அக்கறை கொண்டிருப்பதற்கு மேன்மை தங்கிய
சுல்தானுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுளேன். கவுன்சிலர்கள்
நியமனத்தில் இதனை ஒரு வழிகாட்டியாகக் கொள்வோம். பொருத்தத்தின்
அடிப்படையில் இதனை கட்டங்க கட்டமாக அமல்படுத்துவோம் என அவர்
குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தை மந்திரி புசாரின் (டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி)
விவேகத்திற்கு விட்டு விடுகிறேன். கவலை வேண்டாம். நாங்கள் அவசர
முடிவை எடுக்கமாட்டோம். நாங்கள் எவ்வாறு மாநில அரசு நிர்வாகத்தை
நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை சிலாங்கூர் மக்கள் கவனித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.

இதில் சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் நாங்கள் கலந்துரையாடல்
நடத்துவோம். இதுவே எங்கள் பாணியாகும். கவலை வேண்டாம், பணியை
செவ்வனே நிறைவேற்றுவோம் என்று மாநில சட்டமன்றத்தில் அவர்
தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று, சுல்தான் ஷராபுடினின் பரிந்துரையை
மாநில அரசு நிறைவேற்றுமா? எப்போது இந்த பணி முழுமை பெறும் என
உலு கிளாங் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இங் இவ்வாறு சொன்னார்.

இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற கிள்ளான் அரச மாநகர் மன்ற பிரகடன
நிகழ்வில் உரையாற்றிய மேன்மை தங்கிய சுல்தான், மாநகர் மன்ற
உறுப்பினர் பதவிக்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி குறைந்தது ஐம்பது
விழுக்காட்டு தொழில் நிபுணர்களும் இடம் பெற வேண்டும் என்று
பரிந்துரைத்திருந்தார்.


Pengarang :