NATIONAL

அனைத்துலக போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய அறுவரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

மலாக்கா, பிப் 28 – இந்தோனேசிய சந்தைக்குப் போதைப் பொருளை அனுப்ப இங்குள்ள பந்தாய் கிளேபாங்கைப் பயன்படுத்தி வந்த அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களின் தடுப்புக் காவல்  மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக  மலாக்கா மாநில போலீஸ்  தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.

நாற்பது முதல் 74 வயது வரையிலான அந்த ஆறு சந்தேகப் பேர்வழிகளின் தடுப்புக் காவல்   நேற்றிலிருந்து மார்ச் 4ஆம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  என்று அவர் இன்று வெளியிட்ட  ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம்  21ஆம் தேதி அறுவரைக்  கைது செய்து 40.2  லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,  இந்தோனேசிய சந்தைக்கான இடமாற்று மையமாக பந்தாய் கிளேபாங்கைப்  பயன்படுத்தி வந்த அனைத்துலக  போதைப்பொருள் கடத்தல்  கும்பலை முடக்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மலாக்கா, ஜோகூர் மற்றும் பகாங்கிலுள்ள  மூன்று இடங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் ஐந்து உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட நபர் உள்ளிட்ட அந்த ஆறு நபர்களும்  கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது  கமாருடின் முகமது டின் கூறியிருந்தார்.

கோத்தா ஷாபண்டாரில்  நடத்தப்பட்ட முதல் சோதனையில்  போதைப்பொருளை வேறு வாகனத்திற்கு  மாற்றும் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து   40 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி  மதிப்புள்ள 51.95 கிலோ ஷாபு மற்றும் 31.45 கிலோ எக்ஸ்டஸி பவுடர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்காமில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில்  மூன்று சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்த வேளையில் கெந்திங் ஹைலண்ட்ஸில் மேற்கொள்ளப்பட்ட  மூன்றாவது சோதனையில்  இரண்டு  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :