NATIONAL

உதவிப் பொட்டலங்களில் 70% பூமிபுத்ரா தயாரிப்பு பொருள்களாக இருக்க வேண்டும் – மாநாட்டில் பரிந்துரை

புத்ராஜெயா, மாரச் 1 : வெள்ள நிவாரணப் பொட்டலங்கள், உணவுக்கூடைகள் மற்றும் ரஹ்மா விற்பனை போன்ற அரசின் அநிகாரப்பூர்வ உதவித் திட்டங்களுக்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்களில்  70 சதவீதம் பூமிபுத்ராவுக்குச் சொந்தமான ஹலால் தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்ற பரிந்துரை  2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில்  முன்வைக்கப்பட்டது.

நாட்டில் உள்ள பூமிபுத்ராவிற்கு சொந்தமான நிறுவனங்கள் அல்லது வர்த்தக  வளாகங்களுக்கு உதவுவதை இந்தப் பரிந்துரை  நோக்கமாகக் கொண்டுள்ளது என்று   மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்) நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் அமீர் அலி மைடின் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாட்டிலுள்ள 9,162  ஹலால் சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களில் 38.7 சதவீதம் அல்லது 3,562 நிறுவனங்கள் பூமிபுத்ராவுக்குச் சொந்தமானவையாகும்.  ஆனால், இந்த வணிகங்கள் அனைத்தும் ஹலால் சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல்  வீடுகளிலிருந்து இயங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.

வணிக உரிமையாளர்கள் தங்கள் அன்றாட வணிக நடவடிக்கைகளைத் தக்கவைக்க சுயநிதியை அதிகம் நம்பியுள்ளனர். அதே சமயம், அரசு சார்பு  நிறுவனங்கள் (ஜி.எல்.சி.) நிறைய உதவிகளை வழங்குவதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆகவே, பூமிபுத்ரா பொருட்கள் முதல் தேர்வாக (அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உதவித் திட்டங்களுக்கு) வழங்கப்படுவதை நாம் ஒரு கொள்கையாக மாற்ற வேண்டும் என்று அவர் மாநாட்டில்  தீர்மானத்தை முன்வைக்கும்போது கூறினார்.

அதே நேரத்தில், ஹலால் சான்றிதழை பூமிபுத்ராக்கள்  பெறுவதற்கு வசதியாக அடுக்கு அமைப்பு மற்றும் பசுமைப் பாதையை நிறுவுதல் உள்ளிட்ட வணிகத் தயார்நிலை மதிப்பீடு மற்றும் வழிகாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஹலால் வணிக உருமாற்றுத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அமீர் முன்மொழிந்தார்.


Pengarang :