NATIONAL

ஆடம்பரப் பொருள் வரியின் வழி ஆண்டுக்கு 70 கோடி வெள்ளியை வசூலிக்க அரசு திட்டம்

கோலாலம்பூர், மார்ச் 1- உயர் மதிப்பு பொருள் வரி (எச்.வி.ஜி.டி.) என
தற்போது அழைக்கப்படும் ஆடம்பரப் பொருள்களுக்கான வரி
அமலாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு 70 கோடி வெள்ளி வரை வசூலிக்க
முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த உயர்மதிப்பு பொருள் வரி தொடர்பான மசோதா நடப்பு
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய
பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு நாடாளுமன்ற அகப்பக்கத்தில்
கூறியது.

இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டால் இவ்வாண்டு மே மாதம் முதல் தேதி
அது அமலுக்கு வரும் என்று மக்களவையில் தெப்ராவ் உறுப்பினர் ஜிம்மி
புவா வீ ஸீயின் கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சு தெரிவித்தது.

அதே சமயம், குறைந்த மதிப்பு பொருள் வரியின் (எல்.வி.ஜி.டி.) மூலம்
முதலாம் ஆண்டில் 20 கோடி வெள்ளி வரை வசூலிக்க இயலும் என்று
அது குறிப்பிட்டது.

இந்த குறைந்த மதிப்பு பொருள் வரி கடந்த ஜனவரி 1ஆம் தேதி
அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இணையம் வழி வாங்கும்
500 வெள்ளிக்கும் குறைவான பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி
விதிக்கப்படுகிறது.

தற்போது 52 நிறுவனங்கள் அரச மலேசிய சுங்கத் துறையில் பதிவு
செய்துள்ளன.

விற்பனை வரியை அமல் செய்வதன் வாயிலாக உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுப் பொருள்களுக்கான விலை இடைவெளியைக் குறைக்கவும்
இன் வழி உள்நாட்டுப் பொருள்களுக்குக் கூடுதல் அனுகூலம் கிடைக்கச்
செய்யவும் முடியும் என அமைச்சு கூறியது.

குறைந்த மதிப்புப் பொருள் வரி எவ்வாறு உள்நாட்டு வர்த்தகர்களைப்
பாதுகாக்கும் என்று ஆயர் ஹீத்தாம் தொகுதி பாரிசான் உறுப்பினர்
டத்தோஸ்ரீ வீ கா சியோங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்
அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டது.


Pengarang :