MEDIA STATEMENTNATIONAL

பக்கத்தான் தொடர்ந்து வலுப்பெறுகிறது- எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையையும் ஈர்க்கிறது

ஷா ஆலம், மார்ச் 10- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தற்போதைய நிலை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மையில் பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எனது தலைமையிலான மாநில அரசு நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதானது மாநில அரசின் ஆற்றலை நிரூபிக்கிறது என்று மந்திரி புசாருமான அவர் சொன்னார்.

மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் இரண்டாவது நாளின் போது 33 இடங்களைக் கைப்பற்ற முடியும் என்று நான் நம்பிக்கைத் தெரிவித்திருந்தேன். அத்தேர்தலில் நமக்கு 34 இடங்கள் கிடைத்தன. புதிதாக உறுப்பினர் ஒருவர் நம்முடன் இணைந்துள்ளதால் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நாம் கையாள வேண்டிய மற்றும் தீர்வு காண வேண்டிய பல விஷங்கள் இன்னும் இருந்தாலும் அரசியல் மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பொறுத்த வரை ஏற்ற இறக்கங்கள் நிச்சயம் இருக்கும். இருப்பினும் நாம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம் என்று நேற்று இங்கு  கெஅடிலான் தகவல் மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை விட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிக நம்பிக்கையைப் பெற்றத் தலைவராக விளங்குகிறார் என்று அவர் சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டு மொஹிடின் 50 விழுக்காட்டிற்கும் குறைவான ஆதரவைப் பெற்றிருந்தார். அம்னோ தனது ஆதரவை மீட்டுக் கொண்டப் பின்னர் அந்த ஆதரவையும் அவர் இழந்தார்.

பதினான்கு மாதங்கள் ஆட்சியில் இருந்த இஸ்மாயில்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டார். அவர் ஒருபோதும் 50 விழுக்காட்டு மக்கள் ஆதரவைப் பெற்றதில்லை. நடப்பு பிரதமரின் ஆட்சி நிலையற்றது எனக் கூறப்பட்டாலும் மக்களின் 50 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ளார் என்றார் அவர்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாநில பெரிக்கத்தான் தலைவர்கள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதற்கு ஆட்சேபேம் தெரிவிக்கும் வகையில் செலாட் கிள்ளான் உறுப்பினர் அப்துல் ரஷிட் அசாரி மந்திரி புசார் தலைமைத்துவதற்கு ஆதரவு தருவதாக அறிவித்தார்.


Pengarang :